BIBLE - QUESTIONS AND ANSWERS

விவிலியம் - கேள்வி பதில்கள்

உட்புகுமுன்

திருவிவிலியம் என்பது கிறிஸ்தவ நம்பிக்கைக்கு அடிப்படையானது. ஆனால், ஒரு நூலகம் போன்று அமைந்த விவிலியம் எழுதப்பட்டு பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. மேலும் விவிலிய நூல்கள் எழுதப்பட்ட மொழிகளும் கலாச்சாரப் பின்னணிகளும் இருபத்தோராம் நூற்றாண்டு உலக, இந்திய மற்றும் தமிழகச் சூழலிலிருந்து பெரிதும் மாறுபட்டன. எனவே, விவிலியத்தைப் புரிந்துகொள்வதில் சிக்கல்கள் உண்டு என்பது தெளிவு.

இப்பகுதியில் விவிலியம் பற்றி எழுப்பப்படுகின்ற சிலபல கேள்விகளுக்குப் பதில் வழங்கவிருக்கின்றோம். விவிலிய அறிஞர்களின் ஆராய்ச்சி முடிவுகளைக் கண்முன் கொண்டு இப்பதில்கள் அமைந்திருக்கும். விவிலியத்தை ஆழ்ந்து கற்கவேண்டும் என்னும் ஆர்வம் உடையவர்கள் அவ்வப்போது எழுப்புகின்ற கேள்விகளுக்குப் பதில் வழங்கும் கட்டுரைகளை இப்பகுதியில் எதிர்பாருங்கள்.

கேள்வி 1

விவிலியத்தில் ஏன் இத்தனை வேறுபட்ட மொழிபெயர்ப்புகள் உள்ளன?

திருவிவிலியம் எழுதப்பட்டது இன்று நாம் பயன்படுத்துகின்ற ஆங்கிலம், ஜெர்மன், தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் அல்ல என்பது எல்லாருக்கும் தெரியும். விவிலியத்தின் மூல மொழிகள் எபிரேயம், அரமேயம், கிரேக்கம் என்பவை ஆகும். அம்மொழிகளிலிருந்து பண்டைய மொழிகளிலும் (இலத்தீன், கோப்து, சிரியன் போன்றவை), தற்கால வழக்கிலுள்ள மொழிகளிலும் விவிலியம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எனவே, விவிலியத்தில் ஏன் இத்தனை வேறுபட்ட மொழிபெயர்ப்புகள் உள்ளன என்னும் கேள்விக்கு இரு விதமான பதில்கள் தரலாம். முதல் பதில், உலகத்தில் ஆயிரக்கணக்கான மொழிகள் இருப்பதால், அந்த மொழிகளைப் பேசுகின்ற மக்கள் இருப்பதால், விவிலியம் அந்த வெவ்வேறு மொழிகளில் பெயர்க்கப்பட்டு, அம்மொழிகளைப் பேசும் மக்கள் கடவுளின் வார்த்தையை வாசித்து, தியானித்து, வாழ்க்கையில் கடைப்பிடிக்கவும், வழிபாட்டில் பயன்படுத்தவும் இயல்கின்றது.

ஆனால், ஒரே மொழியிலிலேயே ஏன் வெவ்வேறு பெயர்ப்புகள் இருக்கின்றன என்று சிலர் கேட்கலாம். இக்கேள்விக்குப் பதிலளிக்கும் விதத்தில் ஆங்கில மொழிபெயர்ப்பையும் தமிழ் மொழிபெயர்ப்பையும் எடுத்துக்கொள்வோம். மூன்று முக்கிய நோக்கங்களுக்காக மக்கள் பொதுவாக விவிலியத்தை வாசிக்கிறார்கள்: 1) வழிபாட்டில் பயன்படுத்த; 2) தனிப்பட்ட முறையில் படித்துப் பயனுற; 3) விவிலிய ஆராய்ச்சி செய்வதற்காக.

வழிபாட்டில் வாசிக்கப்படுகின்ற மொழிபெயர்ப்பு பொது அவையில் எல்லாருக்கும் முன்னிலையில் அறிக்கையிடப்படுவது என்பதால் அதில் சாதாரண பேச்சு மொழி தவிர்க்கப்படும். தனிப்பட்ட விதத்தில், தியானம் செய்வதற்காக, செபச் சூழமைவில் வாசித்துச் சிந்திப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற மொழிபெயர்ப்பு கண்கவரும் விதத்தில், படங்களோடு, சாதாரண மொழிநடையில் எழுதப்பட்டதாக இருக்கலாம். ஆனால், விவிலிய ஆராய்ச்சிக்காகச் செய்யப்படுகின்ற மொழி பெயர்ப்புக்கள் சொல்லுக்குச் சொல் என்னும் விதத்தில் மொழிபெயர்க்கப்படும்; மூல பாடத்திலிருக்கின்ற கடின சொற்கள் அல்லது தெளிவில்லாத சொற்றொடர்கள் அப்படியே பெயர்க்கப்படும்.

இந்த மூன்று வகையான மொழிபெயர்ப்புகளும் ஆங்கில விவிலியத்தில் உண்டு. தமிழ் விவிலியத்தில் இவ்வாறு வேறுபடுத்தப்பட்ட மொழிபெயர்ப்புகள் இல்லை. ஆயினும் விவிலியப் பகுதிகளைச் சுருக்கி, எல்லாரும் எளிதில் வாசித்து அறிந்துகொள்ளும் விதத்தில் கதைபோலச் சொல்லுகின்ற நூல்கள் அவ்வப்போது வெளியாகியது உண்டு. சிறுவர் விவிலியமும் வெளியிடப்பட்டதுண்டு.

விவிலியம் எழுதப்பட்ட மூல மொழிகளில் சில சமயங்களில் சில வார்த்தைகள் அல்லது சொற்றொடர்கள் எளிதில் விளங்காமல் இருக்கலாம். சில சமயங்களில் விவிலிய ஆசிரியரே தெளிவில்லாமல் எழுதியிருக்கலாம். அப்போது, மொழிபெயர்ப்பவர் ஒருவாறு ஊகித்துத்தான் பெயர்க்க முடியுமே தவிர, ஐயமறப் பெயர்க்க இயலாது. இச்சூழலில், சிக்கலான அப்பகுதியை அப்படியே சொல்லுக்குச் சொல் என்று மொழிபெயர்த்து சிக்கலைத் தீர்க்காமல் விடலாம், அல்லது சிக்கலைத் தீர்க்கும் விதத்தில் மொழிபெயர்ப்பாளரே ஓர் ஊகத்தின் அடிப்படையில் தெளிவு பட மொழிபெயர்க்கலாம். சிக்கலைத் தீர்க்காமல் இருந்தால் அடிக்குறிப்புகள் தேவைப்படும்; விளக்கவுரையும் வேண்டும். சிக்கலைத் தீர்ப்பதாக இருந்தால் மொழிபெயர்ப்பாளர் ஏற்கெனவே ஒரு முடிவுக்கு வந்து, தமது ஊகத்தின் அடிப்படையில் ஒரு பொருளைப் பாடத்தினுள் புகுத்துகிறார்.

எனவே, எந்த நோக்கத்துக்காக விவிலியம் வாசிக்கப்படுகிறது (வழிபாடு, தனி தியானம், ஆராய்ச்சி) என்பதைப் பொறுத்து விவிலிய மொழிபெயர்ப்பைத் தெரிந்தெடுக்க வேண்டும்.

கேள்வி 2

ஆங்கில மொழிபெயர்ப்புகளில் சிறந்த மொழிபெயர்ப்பு யாது?

இக்கேள்விக்குப் பதிலளிப்பது எளிதல்ல. ஆங்கில மொழியில் பல பெயர்ப்புக்கள் உள்ளன. அவை வெவ்வேறு வாசகர்களைக் கண்முன்கொண்டு செய்யப்பட்டன. சில முக்கியமான பெயர்ப்புகளும் அவற்றின் தனித்தன்மையும் கீழே தரப்படுகின்றன:
1) King James Version: இது சீர்திருத்த சபையினர் நடுவே பல நூற்றாண்டுகளாக வழங்கப்பட்ட பெயர்ப்பு. இங்கிலாந்து மன்னர் ஜேம்ஸ் என்பவரின் ஆணைப்படி செய்யப்பட்ட இந்தப் பெயர்ப்பு 1611இல் வெளியானது. இது எபிரேய, கிரேக்க மூலங்களிலிருந்து செய்யப்பட்டது.
2) Douais-Rheims Bible (1582-1609): இது கத்தோலிக்கர் நடுவே வழங்கப்பட்ட மொழிபெயர்ப்பு. இலத்தீனிலிருந்து (The Vulgate) பெயர்க்கப்பட்டது.
3) The Revised Standard Version
4) The New Revised Standard Version: இது 1990இல் வெளியானது. இது 1950இல் வெளியான The Revised Standard Version என்னும் பெயர்ப்பின் திருத்திய பதிப்பு.